Sunday 3 May 2015
Wednesday 27 February 2013
உலகின் முதல் சோசலிஸ அரசின் நிர்மாணியின் வாழ்வுத்தடங்கள்
Saturday 31 March 2012
Friday 16 December 2011
மட்டக்களப்பு கள்ளியங்காட்டு கதை நாயகன் `பித்தன் ஷா` (கலந்தர் லெப்பை முஹம்மது ஷா) 17 ஆம் ஆண்டு நினைவு
மட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் வாழ்ந்து , உள்நாட்டில் ஏதிலியாகி அங்கேயுள்ள முஸ்லிம் மையவாடியில் அடக்கப்பட்ட (கிழக்கிலங்கையின் சிறு கதை இலக்கிய முன்னோடியான மறைந்த பித்தன் ஷா மரணித்து இன்றுடன் பதினேழு வருடங்களாகின்றன. கள்ளியங்காட்டு கிராமத்தின் உயிர்நாடியாய் திகழ்ந்த கிழக்கின் முஸ்லிம் சிறுகதை இலக்கிய பிதாமகனை கள்ளியங்காடு முஸ்லிம் மக்களின் பள்ளிவாயலும் இறுதியாய் இழந்து போன இன்றைய நிகழ்வுகளை நினைவில் கொண்டு நினவு கூர்கிறேன் )
கிழக்கிலங்கையின் மூத்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான கலந்தர் லெப்பை மீராஷா தனது இயற்பெயரால் அறியப்பட்டதைவிட தானே தனக்கு சூட்டிக்கொண்ட பித்தன் ஷா எனும் அடைமொழிப் பெயருடன்தான் அதிகம் தமிழ் இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்டவர். அறுபதுகளின் ஆரம்பத்தில் கோட்டமுனையிலிருந்து சென்று குடியேறியவர்களுள் அவரின் குடும்பத்தினர்களும் அடங்குவர். அவரோடு சென்ற பலரின் இன மத பிரசன்னம் காரணமாகவே அங்கு முஸ்லிம் கொலனி உருவானது. அந்த வகையில் கள்ளியங்காட்டின் ஒரு பகுதியை முஸ்லிம் கொலனி என்றும் கள்ளியங்காட்டின் மறு பெயரே முஸ்லிம் கொலனி என்று அறியப்படுமளவு வாழ்ந்த சமூகத்தில் ஏழ்மையிலும் பெருமைப்பட வாழ்ந்த மனிதர் பித்தன் ஷா. அங்கிருந்த சாகிரா கல்லூரி, மஸ்ஜிதுல் பிர்தவுஸ் (பள்ளிவாயல்) என அனைத்திலும் அவரின் ஈடுபாடு இறுக்கமாக படர்ந்திருந்தது.
பித்தன் ஷா மட்டக்களப்பின் முன்னோடி சிறுகதை எழுத்தாளராக போற்றப்படுபவர். அவரினை எண்பதுகளின் பிற்பகுதியில் ஓரிரு தடவை தற்செயலாக சந்தித்த நினைவுகள் பசுமையாக உண்டு . மிக நேர்த்தியாக தலைவாரிய நீண்ட மெலிந்த தோற்றமும் எப்போதும் சுத்தமான வெள்ளைநிற மேற்சட்டை அணிந்துகொள்ளும் அவரின் தனித்துவமும் , எப்போது சட்டைப்பைக்குள் எட்டிப்பார்க்கும் கண்ணாடியை முந்திக்கொண்டு முகமன் கூறி குசலம் விசாரிக்கும் பண்பும் அவர் அதிகம் பேசும் சுபாவம் கொண்டவரல்ல என்பதால் பேசும் சூழ்நிலை ஏற்படவில்லை என்பது தவிர அவரின் நினைவுகள் இன்னமும் மனதில் நன்கு பதிந்திருக்கிறது.
இளம் வயதில் தனது ஜே எஸ்,சி பரீட்சையில் சித்தியடையத் தவறியதுடன் தனது இளமை கலை ஆர்வம் காரணமாக யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தனது பதினெட்டாவது வயதில் வீட்டைவிட்டு தென்னிந்தியா சென்று அங்கு சென்னையில் ஸ்டார் பிரஸ் எனும் அச்சகத்தில் ஒரு காரியாலய பையனாக வேலை செய்த போதுதான் புதுமைப்பித்தன் எனும் புனைபெயர் கொண்ட மணிக்கொடிக்கால எழுத்தாளரான சொ. விருத்தாசலம் எனும் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948) தமிழ் சிறுகதை இலக்கிய வேந்தனை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. மேலும் பல இந்திய எழுத்தாளர்களுடனும் நட்புறவு கொள்ளும் வாய்ப்பும் இங்கு இவருக்கு ஏற்பட்டது. எனினும் புதமைப்பித்தனின் எழுத்து மீது ஏற்பட்ட ஈர்ப்பு , அவரை நேரடியாக சந்திக்கும் பொது அவரின் பண்பில் கண்ட பிரமிப்பு என்பன அவருடன் இவரை நெருக்கமாக்கின. வறுமையிலும் கொள்கை பிடிப்புடன் தலைசாய்க்காது இலக்கியம் படைத்த மாண்பு என்பன பித்தன் ஷாவின் பண்புகளாக அடையாளம் காணப்பட்டன. வறுமைக்கு அசைந்து கொடுக்காத வைராக்கியம் இருவரிடமும் இருந்தது. புதுமைப்பித்தனுக்கும் பித்தன் ஷாவுக்கும் உள்ள சிறுகதை இலக்கிய கற்றல் என்பது துரோணர் ஏகலைவன் கொண்ட மானசீக குரு சிஷ்ய உறவோ கொடூரமான குருதட்சனையோ கொண்டதல்ல .மாறாக நட்புடனும் மனித நேய எழுத்துக்களுடனும் ஈர்க்கப்பட்ட பின்பற்றல் காரணமாய் புதுமைப்பித்தனைப்போல் எழுத முனைந்தவர் . அதில் வெற்றியும் பெற்றவர்.
அதனால்தான் முன்னாள் தினபதி சிந்தாமானி பத்திரிக்கைகளின் ஆசிரியர் எஸ் .டி சிவநாயகத்தால் , அவர் தினகரன் பத்திரிக்கையில் பணியாற்றிய காலத்தில் பித்தன் ஷா எழுதிய "கலைஞனின் தியாகம்" எனும் முதற் சிறுகதை பிரசுரிக்கப்பட்ட போது , அக்கதை பற்றி குறிப்பிடுகையில்" தமிழகத்தின் புதுமைப்பித்தன் இறந்து விட்டான் . இனி நம் இலங்கையில் ஒரு பித்தன் பிறந்து விட்டான் " என்று கூறியது பித்தன் ஷாவுக்கு மட்டக்களப்பின் புகழ்பூத்த பத்திரிக்கையாளன் எஸ்.டி சிவநாயகம் வழங்கிய மோதிரக் குட்டுத்தான்.
பித்தன் ஷா இந்தியாவிலிருந்த போதே அங்கு இராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலக யுத்த போரில் இந்தியாவிலிருந்த சென்ற படையணியுடன் பயணித்து மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக எகிப்து , பாலஸ்தீன் உட்பட பல நாடுகளில் பணியாற்றி பதவி உயர்வுகளும் பெற்று இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றே 1947 லில் இலங்கை திரும்பினார். உலக யுத்தத்தில் உலகின் பல தேசங்கள் சென்று திரும்பியும் தனது சூழலில் வாழும் மக்களின் வாழ்க்கையை அவர்களின் நாளாந்த வாழ்வின் துயரங்களை ஏழ்மையின் அவலங்களை , தமது சமூகத்துள் நிலவும் வர்க்க முரண்பாடுகளின் கொடுமைகளை பகைப்புலனாக சிறுகதைகளை படைக்கத் தொடங்கினார்.
இவர் இலங்கை திரும்பியதும் பல்வேறு விதமான சிறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவரால் ஒரு வெற்றிகர வியாபாரியாக வரமுடியவில்லை . இயல்பாகவே இவருக்கு எழுத்து மீதான ஆர்வம் மேலிட அவரின் இளமைக் கால நண்பர்களாகவிருந்த பலர் காரணமாகும். முன்னாள் அமைச்சர் சொல்லின் செல்வர் செல்லையா இராஜதுரை , பிரபல ஓவியர் சமூக சேவகர் , மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை துணை அதிபர் மறைந்த எம்.எஸ்.ஏ .அசீஸ் ஆகியோருடன் சேர்ந்து லங்கா முரசு எனும் சஞ்சிகையினை 1949 களில் வெளியிட்டு வந்ததும் இவரின் எழுத்து துறை மீதான ஆர்வத்தை காட்டுகின்றன. கவிஞர் திமிலைத்துமிலன் எஸ் டி சிவநாயகம் , செழியன் பேரின்பநாயகம் என பலரின் இலக்கிய நட்பின் காரணமாக வேல்மானிக்கம் எனும் இலக்கிய ஆர்வமுள்ள தையற்கடைக்காரின் கடையின் மேலுள்ள அறையில் இலக்கிய சந்திப்புக்களை கிராமமாக மேற்கொண்டு பல்வேறு கலை இலக்கிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர் இவர் இராஜதுரையுடன் சேர்ந்து இளங்கோ அச்சகத்தினை நடத்தியதும், இவர் அரச விரோத பிரசுரங்களை அச்சிடுவதாக இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன் இவரது அச்சகம் சீல் வைக்கப்பட்டதும் இவரின் பொருளாதார ஆதாரத்தினை ஆட்டம் காணச் செய்தது.
புதுமைப் பித்தன் ஷா எனும் மீராஷாவின் ‘இருட்டறை’ எனும் சிறு கதை க பொ த தமிழ் இலக்கியம் (முன்னாள் பாடத்திட்டத்தில்) உள்ளடக்கப் பட்டிருந்துடன் க பொ த உயர்தர தமிழ் ( முன்னாள் பாடத்திட்டத்தில் ) ஈழத்து இலக்கிய வரலாறு பகுதியில் சிறுகதை எழுத்தாளர்கள் தொகுப்பில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது என்பதுடன் இவரை பற்றி மறைந்த பேராசிரியர் கைலாசபதி , இரசிகமணி கனக செந்திநாதன் போன்றோரும் இவரை பற்றி சிலாகித்துள்ளனர். இவர் ஆனந்த விகடன் சிறுகதை போட்டியொன்றில் கலந்து கொண்டு பரிசை பெராதபோதும் அவரின் சிறுகதை சிறந்த கதை என்ற வகையில் ஆனந்த விகடனில் பிரசுரிக்கப்பட்டது. என்பதும் அவரின் சிறுகதை தரத்தினை கோடிட்டு காட்டுகிறது.
நாற்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய பித்தன் ஷா அபூர்வமாகவே எழுதினார். ஒரு ஆண்டுக்கு ஓரிரு சிறுகதைகளையே எழுதினார். அவரின் சிறுகதைகளில் பயங்கரப்பாதை, ஆண் மகன், பாதிக் குழந்தை , அமைதி, தாம்பத்தியம் , பைத்தியக்காரன் , மயானத்தின் மர்மம் , அறுந்த கயிறு இருட்டறை , நத்தார் பண்டிகை , சாந்தி , சோதனை திருவிழா , ஊது குழல் ஊர்வலம் , தாகம் , ஒரு நாள் பொழுது, மனச் சாந்தி , விடுதலை , தாலிக்கொடி என்பனவற்றை நிரலிட்டு குறிப்பிடலாம்.
இவர் தனது எழுதிய சிறுகதைகள் இலங்கையின் பிரபல தமிழ் பத்திரிக்கைகள் அனைத்திலும் வெளிவந்துள்ளன. அவரின் பல பூர்த்தி செய்யப்படாத , மீண்டும் திருத்தம் நாடி எழுதி வைத்திருந்த பல சிறுகதைப் பிரதிகள் , பிரசுரிக்கப்பட்ட பல கதைகளின் கையெழுத்து , அச்சப் பிரதிகள் என பல அவரின் பெறுமதிமிக்க ஆக்கங்கள் 1978 ஆம் ஆண்டு சூறாவளியில் அவரின் கள்ளியங்காட்டு வீட்டில் அழிந்துவிட்டன. அவரின் கதைகள் பலவற்றை சில இலக்கிய ஆர்வலர்கள் அவற்றினை பிரசுரிப்பதாக கூறி எடுத்துச் சென்று விட்டனர் என அவர் தன்னை சந்திக்க வந்த இலங்கையின் இலக்கிய படைப்பாளிகளை அவர்கள் பற்றிய தகவல் திரடடினை காலச் சுவடு என்ற பெயரில் தொடராக நூலுருவாக்கிய இலக்கியவாதியும் கல்விமானுமான எஸ்.எச்.எம். ஜெமீலிடம் (முன்னாள் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் ஆலோசகராக பணியாரியவர்.) கூறியுள்ளார் என்பதனை அவர் பற்றி ஜெமீல் எழுதிய காலச்சுவடு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பித்தன் ஷா பற்றிய எனது நேரிடையான அவரின் சகோதரர் பேரப்பிள்ளைகளை அனைவரின் தகவல்கள் பல எஸ்.எச் எம்.ஜெமீலினால் பித்தன் ஷாவை நேரடியாக சில தடவை சந்தித்தவர் என்ற வகையில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன எனினும் அவர் பற்றிய இன்னும் சில விடயங்கள் அவரை மீண்டும் இலக்கிய உலகின் பதிவுகளுக்காக , அவரின் மானிட நேசிப்புக்காக எழுதப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்துகின்றன. மறுபுறம் கள்ளியங்காட்டின் முஸ்லிம் கொலனி தோற்றம் பெற தொடக்கப் புள்ளியிட்ட வரலாற்றினை இழந்து நிற்கும் முஸ்லிம் கொலனி மக்களின் கதாநாயகர்களில் முதன்மையான பித்தன் ஷாவின் வரலாற்றை மீட்டிப் பார்க்க வேண்டிய தேவையையும் ஏற்படுத்துகின்றன.
கள்ளியங்காட்டில் இன முறுகலுக்கு , புலியின் இன விரோத செயற்பாடுகளுக்கு அஞ்சி 1990 ஆம் ஆண்டில் தாமே உருவாக்கிய தனக்கு மிக அன்னியோன்னியமான வாழிடத்தை விட்டும் ஏதிலியாக திகாரிய என்ற கிராமத்துக்கு வந்து அங்கு இடம் பெயர்ந்து வந்த அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அகதி முகாமிலே தனது இறுதிக்காலம் வரை பித்தன் ஷாவுக்கு இருக்க நேரிட்டது. வட புலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தெற்கின் பல பிரதேசங்களில் இடம்பெயர்ந்தும் அகதி முகாம்களில் , அகதிக் கிராமங்களில் வாழ்ந்தது போல் மறுபுறத்தில் கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்களிலிருந்தும் மொத்தமாக கிழக்கிலே வாழ்வது பாதுகாப்பல்ல என்று கருதி தெற்கிலே பலர் இடம்பெயர்ந்தனர். அந்த வகையில் கோட்டமுனை , கள்ளியங்காடு -முஸ்லிம் கொலனி- முஸ்லிம்கள் சிலர் அகதியாகி அந்தரித்து முஸ்லிம் கிராமமான திகாரிய உள்ளிட்ட கம்பஹா மாவட்டத்திலுள்ள பல முஸ்லிம் கிராமங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.
புதுமைப் பித்தனின் சிறு கதைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற ஜெமீல் போன்றோர் 1984 ஆம் ஆண்டில் ஈடுபட்டபோது அது முடியவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். ஆயினும் ஆம் ஆண்டில் பித்தன் கதைகளை டொமினிக் ஜீவா மேமன் கவி ஆகியோர் முன்னின்று மல்லிகைப் பந்தல் வெளியீடாக 1995 ஆம் ஆண்டு பித்தன் கதைகள் என்ற பெயரில் வெளியிட்டனர். அக்காலகட்டத்தில் அவர் திகாரி அகதி முகாமில் இருந்ததார் அவரின் நூல் வெளியிடப்படும் சில நாட்களுக்கு முன்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து தனது சுய விருப்பின் பேரில் மட்டக்களப்பு திரும்பி அங்கே மரணித்துவிட்டார். எனினும் இவர் திகாரிய அகதி முகாமில் இறந்தபோது 1991 ஆம் ஆண்டில் இவரை இலக்கிய வேந்தர் எனும் பட்டமளித்து பணப்பரிசும் வழங்கி முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு கவுரவித்தது. அதுபோலவே இந்து கலாச்சார அமைச்சராகவிருந்த தேவராஜும் தனது அமைச்சிலே இவரின் இலக்கியப் பணிக்காக இவரை கவுரவித்துள்ளார்.
ஆயினும் இறுதிவரை தான் வாழ்ந்த அந்த மண்ணில் உள்ள மையவாடியில் தான் அடக்கப்பட வேண்டும் என்பது அந்த கிராமத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பித்தன் ஷாவின்இறுதி விருப்பமாக இருந்தது. ராகம வைத்தியசாலையில் சுவாசநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த போதே தான் மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்; தனது மரணம் நெருங்குகிறது என்பதை உணர்ந்து , தான் இறந்தால் கள்ளியங்காட்டு மையவாடியில் அடக்கி விடும்படி தனது இளைய சகோதரரிடம் வேண்டிக் கொண்டார். அவ்வாறே மட்டக்களப்பில் -கோட்டமுனையில் - தனது குடும்ப உறவினர்களுடன் தங்கியிருந்த வேளையில் அன்று மரணமாகி கள்ளியங்காட்டிலே உள்ள முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டார். கள்ளியங்காட்டின் முஸ்லிம் கொலனியின் வரலாற்று கதை நாயகன் இன்றில்லை அவன் முன்னின்று உருவாக்கிய முஸ்லிம் கொலனி கிராமமும் இன்றில்லை . அந்த மனிதனைப் போல பல நூற்றாண்டுகளாய் மட்டக்களப்பில் மரணித்த பலரை உள்வாங்கிய அந்த மையவாடியும் இனி வருங்காலத்தில் அங்கிருக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை!
பிற குறிப்பு :
இந்த ஆக்கமே பித்தன் ஷா பற்றிய ஒரு சிறு குறிப்பென்றே குறிப்பிடலாம்
Tuesday 27 September 2011
Friday 10 December 2010
எனது நிலத்திற்காக பிரார்த்தியுங்கள்!
தீபச்செல்வன்-திகதி:07.12.2010
வீழ்ந்து துயரம் விளைந்து மூடிய நிலத்தைதுண்டாக்கிச் செல்ல வரும் கைகள் விடும் கட்டளைகளால்இன்றெமது நிலம் துடித்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் ஒருமுறை பெயர்ந்து செல்லுமாறுசனங்கள் பணிக்கப்பட்ட வேளையில் குழந்தைகள் வெருண்டழுதுகைகளால் நிலத்தை தொடுகின்றனர்ஆறுகள் நிலத்தை முத்தமிட்டுச் செல்லும் மழைநாளில்ஈரமாகி செழித்த நிலம் கொதித்துக் கிடக்கிறது.
விரக்தியையும் ஏமாற்றத்தையும்தவிர என்னிடம் எதுவுமில்லைகொள்ளைக்காரர்கள் நம்பிக்கையை முறியடிக்கிறார்கள்மீண்டும் மீண்டும் நிலத்தில் எத்தனை கைகள் உதைக்கின்றன?நிலத்தை அள்ளிச் செல்லஎத்தனை விதிகளை எழுதுகின்றன?பிறந்து கிடந்த நிலத்தை கொள்ளையடிக்கஎத்தனை வடிவங்கள் அலைகின்றன?
வல்லமை அழிந்து கடவுள்களால் கைவிட்டதுயரைத் தின்று களிக்கும் காலத்தில்எனது நிலத்திற்காய் பிரார்த்திப்பாயா தோழனே!
அமைதியற்று தெருக்களில் பறிக்கப்பட்ட நிலத்தின் பறிக்கப்பட்ட நிருபங்களுக்காகஅலையும் சனங்களிடம் இல்லை துளிர்விடும் வார்த்தைகள்குந்தியிருக்கும் நிலங்களை தின்றுசனங்களை வதைக்கும் காலம் நம்மை அச்சுறுத்துகிறதுவாழ் நிலக் கனவின் வாக்குமூலங்களை நிராகரித்துநிலத்துடன் கொல்லப்படுகின்றனர் சனங்கள்.
கைவிடப்பட்ட சனங்களுக்காய்நிலத்திற்காய் அழுதலையும் குழந்தைகளுக்காய்குந்தியிருக்க ஒரு துண்டு நிலத்திற்காய்பிரார்த்தனை செய் தோழி!தாழ் நிலம் மேலுமாக தாழ்த்தப்படுகிறதுஆறுகளுடன் மருதமரங்கள் துடித்தசைகின்றன.
தவிக்கும் தாயே உனது கண்ணீரும்உன் பிள்ளைகளின் குருதியும் இந்த ஆற்றில் பெருக்கெடுத்துச் செல்கிறதுதாழ் நிலக்குழந்தைகளே நாம் எங்கு செல்வது?குருதியும் கண்ணீரும் காயாத நிலத்தைதுயர் இன்னும் ஈரமாக்குகிறது.
தெருத் தெருவாக, கிராமம் கிராமமாக நகரம் நகரமாகநிலத்தை அள்ளிச் செல்பவர்களின் அகலமான கைகள் நிலமீதலைகின்றனதயவு செய்து எனது நிலத்திற்காக தொடர்ந்து பிரார்த்தியுங்கள்!
Monday 18 October 2010
வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
எழுச்சி கொள்க கவிஞர்களே!
தாயகமூச்சு எமக்கில்லையா?
ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன?
உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக.
நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை - எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது... கூடவே கூடாது.
முற்றத்து மணற்பரப்பில்
முழுமதியின் எழிலொளியில்,
சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி,
அடிவளவு மூலையிலே படர்ந்த
முல்லைச் சொதி மணக்கும்
கவளச் சோறெண்ணி,
ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி,
பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே....
விட்டுவிடுவோமா?
தாய்நிலத்தில் ஏறி நின்று அந்நியன் கூத்தாட
வாயொடுக்கி, மெய் நடுக்கி விதியென்று கிடந்திடவோ?....
புலம்பெயர்ந்து கிடந்தாலும் புலன் மாறக்கூடாது.
வலியென்று துடித்தாலும்,
'அம்மா" என்றழைத்து விழுந்து புரண்டாலும்
எமைத் தாங்கிப் பிடிக்கின்ற தாய்மடியைத்
தவிப்பெய்த விட்டிடவோ....
தமிழச்சாதியாய் தரணிக்குள் பிறப்பெடுத்தோம்?
வாகை சூழ்ந்திருக்கும்,
வன்னிமேனியிலே சோகம் படர்ந்திடுமோ?
வாயாரத் தமிழ் தொடுத்து வல்கவிகள் நல்கும் கவிமுரசுகளே!
காலம் எம் காலடியில் கைகட்டி நிற்கிறது.
வாழ்வை வனைய வல்லமைபூட்டி
எழுதுகோல்கள் எழுந்துதான் ஆகவேண்டும்.
இது காலக்கட்டளையும் கூட..
ஆவி துடித்திருக்கும் விழுதுகளின் ஓரவிழிக்கசிவில்
தாயை மீட்கின்ற பாதிப்பலமிருக்கும் சேதியைக் கூவி முழங்குக.
நிமிர்ந்த தானை செருக்கோடு தலைவன் வழி தொடருகையில்
மேதினி வாழ் தமிழின் போர் முரசங்கள்
மேனி நுடங்குதல் ஆகாது.
சோகச் சுமை ஏந்தலும், ஓர்மக்குரல் அடைத்தலும்
எழுதுகோல் வல்லமைக்கு இழிவல்லவா...
வல்லமை நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.
முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.
போர் மூசிய பேய்க்காற்றை எதிர்கொள்ளும்
பலம் தர நாமுள்ளோம்.
அஞ்சற்க....என தாயக உறவுகள் நோக்கி
ஆயிரமாயிரம் கவி படைத்து எழுக எம் கவிஞர்களே.
இன்று,
காலக் கட்டளை ஈழத்தமிழரின் திறவுகோல்கள் அற்ற
இதயவாசல்களையும் இடித்துப் பெயர்த்துளது.
பழி சூழும் நிலை எங்கள் பரம்பரைக்கு வந்திடுமோ என
இதுவரை காலமும் விழிமூடி நடித்தோரும் வெம்பி எழுந்துளர்.
உப்புக் காற்றுரசும் ஊர்மடியின் நினைப்பூற,
நேற்றுவரை செக்கிழுத்தோரும் சீற்றத்தில் கனல்கின்றர்.
அள்ளிப்பிடித்திருக்கும் ஆவி ஓய்ந்தால் கொள்ளிக்குத்தன்னும்
குலந்தழைத்தமண் வேண்டுமென சொல்லித் துடிக்கின்ற
சொந்தங்களும் எழுந்துளர்.
பள்ளிக் காலத்தில் பதிவிட்ட சித்திரத்தை
சில்லுருட்டி விளையாடிய செம்பாட்டுப் புழுதிமண்ணை
கல்லுக்குத்தி வைத்த தேர்முட்டி மூலைகளை
எண்ணி மகிழ்வோரும் எழுச்சியுற்று விரிந்துள்ளர்
எனும் சேதிகள் எங்கள் சொந்தங்களைச் சென்றடைய வேண்டும்.
வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது.
வசந்தம் தாய்மண்ணைத் தழுவி மகிழாது.
முற்றத்து மலர்களால் முகம் சிவக்கமுடியாது.
நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை - எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது... கூடவே கூடாது.
நன்றி:http://valvaizagara.blogspot.com/